விழுப்புரம்
அனுமதியின்றி செயல்பட்ட 30 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைப்பு
|விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட 30 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த சோகம் நீங்குவதற்குள் தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் பாரில் மது குடித்த 2 பேர் சிறிது நேரத்திலேயே வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி விழுந்து இறந்தனர். இதுகுறித்து அங்குள்ள போலீசார் நடத்திய விசாரணையில் 2 பேரும் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் உயிரிழந்தது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து மதுவில் சயனைடு கலக்கப்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும் செயல்படக்கூடிய மதுபானக்கூடங்கள் மற்றும் டாஸ்மாக் கடை அருகில் அனுமதியின்றி நடத்தி வரும் பெட்டிக்கடைகளை சீல் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.
30 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைப்பு
இதன் அடிப்படையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் அதிகாரிகள், உள்ளூர் போலீசாரின் உதவியுடன் மாவட்டங்கள் முழுவதும் டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த மதுபான கூடங்களில் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது 2 மாவட்டங்களிலும் 30 மதுபானக்கூடங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை போலீசார் மூலம் அதிரடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபோல் டாஸ்மாக் கடை அருகில் செயல்பட்டு வந்த 25 பெட்டிக்கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.