< Back
மாநில செய்திகள்
தொழில் வரி கட்டாத 2 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்
கடலூர்
மாநில செய்திகள்

தொழில் வரி கட்டாத 2 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்

தினத்தந்தி
|
15 March 2023 6:45 PM GMT

விருத்தாசலத்தில் தொழில் வரி கட்டாத 2 டாஸ்மாக் கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் நாச்சியார்பேட்டை மற்றும் விருத்தாசலம் ஜங்ஷன் சாலை பஸ் நிலையம் அருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த 2 கடைகளுக்கான தொழில் வரி தலா 34 ஆயிரத்து 515-ரூபாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நகராட்சிக்கு செலுத்த நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர். இதையடுத்து நிலுவையில் உள்ள தொழில் வரியை உடனே செலுத்துமாறு நகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் தொழில்வரியை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நகராட்சி ஆணையாளர் சேகர் தலைமையிலான அதிகாரிகள் தொழில் வரியை வசூலிக்க அந்த டாஸ்மாக் கடைகளுக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள், தொழில்வரியை கட்டவில்லை. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அந்த 2 டாஸ்மாக் கடைகளையும் பூட்டி சீல் வைத்து விட்டு சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாஸ்மாக் கடை அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்திற்கு விரைந்து சென்று ஓரிரு நாட்களில் தொழில் வரியை கட்டி விடுவதாக ஒப்புதல் கடிதம் எழுதி அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அதிகாரிகள் அகற்றினர்.

நடவடிக்கை

அதன்பின்னர் மீண்டும் டாஸ்மாக் கடை இயங்கியது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சேகர் கூறுகையில்,

விருத்தாசலம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை பலர் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதனால் ரூ.13 கோடிக்கு மேல் நிலுவைத்தொகை உள்ளது. இதையடுத்து வரி கட்டாத வீடு மற்றும் கடைகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி, சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உடனே கட்ட வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்