சென்னை
சட்டவிரோதமாக செயல்பட்ட 77 மதுபான பார்களுக்கு 'சீல்' - வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை
|சென்னை புறநகர் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 77 மதுபான பார்களுக்கு வருவாய்த்துறையினர் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரக எல்லையில் உள்ள பள்ளிக்கரணை மற்றும் தாம்பரம் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்கள் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர், மேடவாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சேலையூர், நாகல்கேனி, முடிச்சூர், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், தாழம்பூர், வண்டலூர் உள்பட 77 இடங்களில் சட்டவிரோதமாக மதுபான பார்கள் இயங்கி வருவதும், அரசியல் கட்சி பிரமுகர்கள் நடத்தி வரும் இந்த பார்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுவதும், இதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் துணை புரிவதும் தெரியவந்தது.
இதையடுத்து தாம்பரம் பகுதியில் செயல்பட்ட 27 சட்டவிரோத மதுபான பார்களுக்கு தாசில்தார் கவிதா தலைமையிலும், பல்லாவரம் பகுதியில் செயல்பட்ட 7 சட்டவிரோத பார்களுக்கு பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலும் என சென்னை புறநகர் பகுதிகளில் செயல்பட்ட 77 சட்டவிரோத மதுபான பார்களுக்கு ஒரே நாளில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக 'சீல்' வைத்தனர்.
மேலும், "பார்கள் நடத்த துணை புரியும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது வருவாய்த்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும். டாஸ்மாக் கடைகளில் பார்களை அனுமதிக்க வேண்டாம்" என டாஸ்மாக் ஊழியர்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.