சென்னை
கொடுங்கையூரில் சுகாதாரமின்றி இயங்கிய 12 தோல் மண்டிகளுக்கு 'சீல்' - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
|கொடுங்கையூரில் சுகாதாரமின்றி இயங்கிய 12 தோல் மண்டிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ நடவடிக்கை எடுத்தனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை 4-வது மண்டலம் 35-வது வார்டு எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள சிங்கார தெருவில் 12-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு தோல் மண்டிகள் இயங்கி வருகிறது. இந்த மண்டிகள் சுகாதாரமற்ற முறையிலும், உரிமம் பெறாமலும் இயங்கி வருவதாக தொடர் புகார்கள் வந்தன. அதன் பேரில், மண்டல அதிகாரி மதிவாணன் உத்தரவின்படி, மண்டல உதவி வருவாய் அதிகாரிகள் ராமன், ராஜ்குமார். தலைமையில் மண்டல மருத்துவர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் தோல் மண்டிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது தோல் மண்டிகள் அனைத்தும் சுகாதாரமற்ற நிலையில் நோய் பரவும் நிலை இருப்பது உறுதியானதையடுத்து, தோல் மண்டிகளை பூட்டி சீல் வைத்தனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் தோல் மண்டிக்காரர்கள் மற்றும் கடைக்காரர்கள் தகராறில் ஈடுபட்டனர். உடனே கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில், கொடுங்கையூர் காவல் நிலையத்திலிருந்து 10-க்கும் மேற்பட்டோர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கிருஷ்ணமூர்த்திநகர் பகுதியில் சொத்து வரி உரிமம் பெறாமல் இயங்கி வந்த தண்ணீர் கேன் கடை உட்பட 6 கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.