திருச்சி
ஐஸ்கிரீம் கடை- ஜவுளி நிறுவன உணவகத்திற்கு 'சீல்'
|ஐஸ்கிரீம் கடை- ஜவுளி நிறுவன உணவகத்திற்கு 'சீல்' வைக்கப்பட்டது.
ஐஸ்கிரீம் கடை
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் தலைமை தபால் நிலையம் எதிரில் பிரபல ஐஸ்கிரீம் கடை இயங்கி வந்தது. இந்த கடையில் உணவு தயாரிக்கும் இடம் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் மற்றும் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்ததாகவும் கூறி, உணவு பாதுகாப்பு துறையினரால் ஏற்கனவே ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு மாதிரியை எடுத்து சோதனை செய்தனர். மேலும் அபராதத்தை கட்ட தவறியதால் நேற்று அந்த ஐஸ்கிரீம் கடையில் உணவு விற்பனை தற்காலிகமாக தடை செய்யப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. அந்த கடையில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் இருந்த உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உணவகம்
இதேபோல் திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் உள்ள உணவகத்தில் ஆய்வு செய்தபோது உணவு தயாரிக்கும் இடத்தில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அந்த உணவகத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் மற்றும் உணவு விற்பனை தற்காலிகமாக தடை செய்யப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. மேலும் அந்த 2 கடைகளுக்கும். அங்குள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த குறைகளை நிவர்த்தி செய்த பின்னரே உணவு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு சட்டப்பூர்வ உணவு மாதிரியும், அபராத தொகையும் விதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்து வந்த திருச்சி கோட்டை நந்திகோவில் அருகில் உள்ள ஒரு டீக்கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து 'சீல்' வைக்கப்பட்டது.