ராமநாதபுரம்
நிறம் மாறி காட்சியளிக்கும் கடல் நீர்
|தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மண்டபம் அருகே பாசிகள் படர்ந்து கடல் நிறம் மாறி காணப்படுகிறது.
பனைக்குளம்,
தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மண்டபம் அருகே பாசிகள் படர்ந்து கடல் நிறம் மாறி காணப்படுகிறது.
நிறம் மாறிய கடல்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இதில் 13 தீவுகள் ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டின் கீழும், மீதமுள்ள தீவுகள் தூத்துக்குடி மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டின் கீழும் வருகின்றது. இந்த 21 தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் 3,600 வகையான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் தீவை சுற்றிய கடல் பகுதியில் பல வகையான பாசிகள் கடலுக்குள் உள்ளன.
இந்த நிலையில் உச்சிப்புளி அருகே உள்ள நொச்சியூரணி முதல் மானாங்குடி, புதுமடம் வரையிலான கடல் பகுதியில் ஒரு விதமான பாசிகள் படர்ந்த நிலையில் கடல் நீர் நிறம் மாறிய நிலையில் காட்சியளித்து வருகின்றன. குறிப்பாக சாம்பல் மற்றும் மண்ணிற நிறத்தில் பாசிகள் கரையை ஒட்டிய கடல் பகுதியில் படர்ந்து இருப்பதால் கடலில் நிறமும் வழக்கமான நிறத்தை விட நிறம் மாறியே காட்சியளித்து வருகின்றது.
வழக்கமான ஒன்றுதான்
இதுகுறித்து புதுமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறும்போது, ஆண்டு தோறும் இது போன்று ஜூன் மாத சீசனில் பூங்காரல் என்ற வகையான பாசி கடலில் படர்ந்து வருவது வழக்கமான ஒன்றுதான். கடல் அலையின் வேகம் மற்றும் காற்றின் வேகம் அதிகமாகும் பட்சத்தில் இந்த பூங்காரல் பாசியானது தானாகவே கரையில் ஒதுங்கி அழிந்துவிடும். இதனால் மீன்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. இந்த வகையான பாசிகளை மீன்கள் விரும்பி சாப்பிடும்.
அதே நேரம் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பூங்கோரை என்று சொல்லக்கூடிய பச்சை பாசிகள் கடலில் படர்ந்து வரும். அந்த பச்சை பாசியால் கடல் நீரின் நிறமே பச்சை நிறத்தில் மாறிவிடும். அந்த பாசிகளால்தான் மீன்கள் சுவாசிக்க முடியாமல் இறந்து கரை ஒதுங்கும். கடந்த 3 ஆண்டுகளாகவே அந்த பச்சை பாசிகளால் அதிகமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.