கடலூர்
புயல் ஓய்ந்தும் ஓயாத கடல் சீற்றம்
|கடலூாில் மாண்டஸ் புயல் ஓய்ந்த நிலையிலும் கடலூர் கடலில் அலைகள் சீற்றம் ஓயாமல் இருந்தது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும் - சென்னைக்கும் இடையே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாவிட்டாலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலூர் சுபஉப்பலவாடி, தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடல் அலைகள் பல அடி தூரத்துக்கு வந்தது.
இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையை தாண்டி பல அடி தூரத்துக்கு டிராக்டர் மூலம் கட்டி வெளியே இழுத்து சென்றனர். இருப்பினும் கடல் சீற்றத்தால் கரைகளில் மண் அரிப்பு ஏற்பட்டது. கடற்கரையோரம் இருந்த தென்னை மரங்களும் விழுந்தன. சில இடங்களில் சாலைகளில் மண் அரிப்பு ஏற்பட்டது.
கடல் சீற்றம்
இதற்கிடையில் அந்தமான் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, நாளை (செவ்வாய்க்கிழமை) தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகிறது. இது அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது. பின்னர் அது புயலாக மாறுமா? என்று அடுத்த கட்ட நகர்வை பொருத்து தெரிய வரும்.
இருப்பினும் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் நேற்று முன்தினம் சற்று சீற்றம் குறைந்து காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று கடலூரில் கடல் மீண்டும் சீற்றத்துடன் இருந்ததை பார்க்க முடிந்தது. அலைகள் 1 மீட்டரை தாண்டி ஆக்ரோஷமாக எழுந்து கரையில் மோதின. கடற்கரையோரம் போடப்பட்ட கருங்கல்லில் அலைகள் மோதிச்செல்கிறது.
இதனால் பொதுமக்களும் கடற்கரையோரம் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.