திருநெல்வேலி
விவசாயிக்கு அரிவாள் வெட்டு
|பரப்பாடி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இட்டமொழி:
பரப்பாடி அருகே கல்மாணிக்கபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன்கள் மகாராஜன் (வயது 42), வேல்பாண்டி (38). விவசாயிகளான இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை உள்ளது. இவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான தோட்டம் வேப்பன்குளத்தில் உள்ளது. நேற்று அங்கு சென்ற வேல்பாண்டி, அவருடைய மனைவி பரமேசுவரி (33) ஆகிய 2 பேரும் தேங்காய் பறித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மகாராஜன், அவரது தந்தை மாடசாமி ஆகிய 2 பேரும், இந்த தோட்டத்தில் உங்களுக்கு பங்கு கிடையாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் 2 பேரும் வேல்பாண்டியை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டி, கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வேல்பாண்டி நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பரமேசுவரி அளித்த புகாரின்பேரில், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மகாராஜன், மாடசாமி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.