ஈரோடு
கடைக்கு சரக்கு அனுப்பாததால் ஜவுளி நிறுவன உரிமையாளருக்கு கத்திக்குத்து
|ஜவுளி நிறுவன உரிமையாளருக்கு கத்திக்குத்து
பெருந்துறையில் சரக்கு அனுப்பாததால் ஜவுளி நிறுவன உரிமையாளரை கத்தியால் குத்திவிட்டு சிறுமியை கட்டிப்போட்டு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பாலாஜி கார்டனைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). அவருடைய மனைவி ரேவதி (33). இவர்களுக்கு பரணிதிஷா (12) என்ற மகளும், பார்த்தசாரதி (8) என்ற மகனும் உள்ளனர்.
கணவன்- மனைவி 2 பேரும் பெருந்துறையில் பெண்களுக்கான ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர் (33). இவர் ரேவதியுடன் கல்லூரியில் ஒன்றாக சேர்ந்து படித்துள்ளார்.
ஷோரூம் தொடக்கம்
இந்த நிலையில் செந்தில்குமார் ஆயத்த ஆடைகளை விற்பனை செய்யும் ஷோரூம் ஒன்றை ராஜசேகருடன் கூட்டு சேர்ந்து கடந்த ஆண்டு உடுமலைப்பேட்டையில் தொடங்கினார். இதன் நிர்வாகப் பொறுப்பை ராஜசேகரிடம் ஒப்படைத்துள்ளார். அவர் ஷோரூமை நடத்தி வந்தார்.
தொடக்கத்தில் ஷோரூம் நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ேஷாரூம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், செந்தில்குமார் தயாரித்து அனுப்பி வைக்கும் ஆடை வகைகளுக்கான பணத்தை ராஜசேகர் முறையாக தரவில்லை எனத் தெரிகிறது.
சரக்கு அனுப்ப மறுப்பு
இதனால் செந்தில்குமாரும், ரேவதியும் உடுமலைப்பேட்டையில் உள்ள கடைக்கு தங்களது தயாரிப்பு சரக்குகளை அனுப்பாமல் நிறுத்தியுள்ளனர். உடனே ராஜசேகர் அவர்களிடம், சரக்கு இல்லாமல் கடையை நடத்த முடியாது. எனவே சரக்கை அனுப்பி வையுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் செந்தில்குமார் சரக்கை அனுப்ப முடியாது என்று மறுத்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜசேகர், உடுமலைப்பேட்டையில் இருந்து புறப்பட்டு பெருந்துறை பாலாஜி கார்டனுக்கு வந்தார். பின்னர் செந்தில்குமார் வீட்டுக்கு சென்று அவரிடமும், ரேவதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன்பின்னர் அன்று இரவு அவர்கள் வீட்டிலேயே ராஜசேகர் தூங்கியுள்ளார். செந்தில்குமாரும், ரேவதியும் மகன், மகளுடன் ஒரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். ராஜசேகர் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்தார்.
கத்திக்குத்து
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் தூக்கத்தில் இருந்து திடீரென ராஜசேகர் எழுந்தார். பின்னர் அவர் செந்தில்குமார், ரேவதி இருக்கும் அறைக்கு சென்று அவர்கள் 2 பேரையும் தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பியுள்ளார். அதன்பின்னர் அவர்களிடம், 'உங்களால் தான் எனது வாழ்க்கை வீணாகி விட்டது' என்று கூறி தனது கையில் வைத்திருந்த சிறிய பேனா கத்தியால், செந்தில்குமாரின் நெஞ்சிலும், முதுகிலும் குத்தியுள்ளார். மேலும் ரேவதியையும் தாக்க முயற்சித்துள்ளார்.
இதில் சுதாரித்துக்கொண்ட கணவன், மனைவி 2 பேரும் தங்களது மகன் பார்த்தசாரதியை எடுத்துக்கொண்டு, விட்டை விட்டு வெளியே ஓடிவந்து நின்றனர். ஆனால் மகள் பரணிதிஷாவை எடுக்க மறந்து விட்டார்கள்.
கைது
உடனே ராஜசேகர் அந்த சிறுமியை பிடித்து படுக்கையில் கயிற்றால் கட்டிப்போட்டார். அதைத்தொடர்ந்து தன்னுடைய உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதை பார்த்த செந்தில்குமார் அவரை தடுத்து நிறுத்தினார்.
பின்னர் இதுபற்றி உடனடியாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கட்டி போடப்பட்டிருந்த பரணிதிஷாவை மீட்டனர். அதைத்தொடர்ந்து, கொலை முயற்சியில் ஈடுபட்டதோடு, தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்ததாக ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.