கொளுத்தும் வெயில்: காரின் மேல் தென்னந்தட்டிகளை வைத்து முதியவர் குளுகுளு பயணம்
|கோடை வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நெல்லை,
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே கோடைவெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பகலில் அனலாக வீசும் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க பெரும்பாலானவர்கள் இயற்கை பானங்களை அருந்துகின்றனர். வீடுகள், அலுவலகங்கள், கார்கள் போன்றவற்றில் குளிர்சாதனங்களை பொருத்துகின்றனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனை தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர் பிரம்மநாயகம் (வயது 78), கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக தனது காரின் மேல் பகுதியில் தென்னந்தட்டிகளை வைத்து கட்டி வித்தியாசமான முறையில் பயணிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''காரின் மீது தென்னந்தட்டிகளை ைவத்து பயணிப்பது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும் எனக்கு குளுமையாக உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கோடையில் எனது காரில் தென்னந்தட்டிகளை வைத்து கட்டி இயற்கையான குளுகுளு காற்றுடன் இனிமையான பயணம் மேற்கொள்கிறேன்'' என்றார்.