வாட்டி வதைக்கும் வெயில்: பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி கொடுத்த அறிவுரை
|வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த அறிவுரைகளை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
சென்னை,
நடப்பு ஆண்டில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கத்திரி வெயில் துவங்கும் முன்பே வெயில் கோர தாண்டவம் ஆடுகிறது. வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், வெயிலினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த அறிவுரைகளை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:-
கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சிளம் குழந்தைகள், சிறு வயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகளவு பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
வெளியில் வேலை செய்யும் போது, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லையென்றாலும், போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும் அளவில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.சூடான பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஓ.ஆர்.எஸ்.உப்புக் கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும்.தேவை இல்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்" இது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது