சென்னை
தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணின் ஸ்கூட்டர் திருட்டு
|ஆயிரம் விளக்கு பண்டாரி சாலையில் தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணின் ஸ்கூட்டரை மர்மநபர் திருடி சென்றார்.
ஆயிரம் விளக்கு பண்டாரி சாலையில் வசிப்பவர் கோமதி (வயது 28). இவர் அண்ணாசாலை பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பார். தனது ஸ்கூட்டரில் உணவு எடுத்து சென்று பிளாட்பாரத்தில் வைப்பார். நாய்கள் உணவு சாப்பிடும்வரை காத்திருப்பார். உணவை நாய்கள் சாப்பிட்ட பிறகு ஸ்கூட்டரில் வீடு திரும்புவார்.
வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு கோமதி தனது ஸ்கூட்டரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு நாய்களுக்கு உணவு கொடுத்தார். ஸ்கூட்டரில் சாவியை வைத்து விட்டதாக தெரிகிறது. சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்த கோமதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்கூட்டரை காணவில்லை. சாவியுடன் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரை யாரோ, மர்ம நபர் நைசாக திருடிச்சென்று விட்டார். ஸ்கூட்டரில் வைத்திருந்த அவரது செல்போனும் பறிபோய் விட்டது.
இது குறித்து கோமதி, அண்ணாசாலை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.