நீலகிரி
அறிவியல் கருத்தரங்கு
|குன்னூர் உண்டு உறைவிட பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.
குன்னூர்
குன்னூரில் உள்ள சர்குரு ஆதிதிராவிடர், பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் கே.ஜே.ராஜு கலந்துகொண்டு பேசும்போது, அறிவியலில் இயற்பியல் துறை வளர்ந்த அளவிற்கு உயிரியல் துறையில் வளர்ச்சி அடையவில்லை. உதாரணமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் வருங்கால உணவு தேவையை பூர்த்தி செய்தாலும், புதிய தொழில்நுட்பங்களை பயம் காரணமாக மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. இருந்தாலும் மரபணு மாற்றம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேரட், தர்பூசணி, உருளைக்கிழங்கு, ஆப்பிள், தக்காளி போன்ற காய்கறிகள் நமது பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அண்மையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு எண்ணைய், செறிவூட்டப்பட்ட அரிசி ஆகியவை நாட்டில் புழக்கத்திற்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. வருங்காலத்தில் மனித மரபணுவை மாற்றி அமைப்பது மூலமாக புற்றுநோய், மறதி நோய் போன்ற பரம்பரையாக வரும் நோய்களை குணப்படுத்த வாய்ப்பு உள்ளது என்றார். முன்னதாக ஆசிரியர் ராஜா அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியை லலிதா நன்றி கூறினார்.