< Back
மாநில செய்திகள்
காலாவதியான வழக்குகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும்- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
மாநில செய்திகள்

காலாவதியான வழக்குகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும்- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

தினத்தந்தி
|
5 Sept 2022 2:38 AM IST

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 20 சதவீத வழக்குகள் காலாவதியாகி விட்டன. இதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தாலே, நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறினார்.

அடிக்கல் நாட்டு விழா

சென்னை ஐகோர்ட்டில் 9 அடுக்குகளை கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் அடிக்கல்நாட்டு விழாவும், சென்னை பழைய சட்டக்கல்லூரி புராதன கட்டிடத்தை புதுப்பிக்கும் திட்ட தொடக்க விழாவும் ஐகோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல, சட்டக்கல்லூரியை புதுப்பிக்கும் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தொடங்கி வைத்தார்.

இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் எம்.துரைசாமி, டி.ராஜா, பர்வேஷ் உபாத்தியாய் உள்ளிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, பொன்முடி, வெள்ளகோவில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அற்புதமான மாநகரம்

இந்த நிகழச்சியில் கலந்து கொண்டவர்களை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி வரவேற்று பேசினார். ஐகோர்ட்டு நீதிபதி டி.ராஜா நன்றி கூறினார்.

விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது:-

தமிழ்நாடு எனக்கு புகுந்த வீடு. சென்னை ஒரு அழகான அற்புதமான மாநகரம். அதேபோல சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமரும் கோர்ட்டு அறை உலகத்திலேயே தலைசிறந்த அழகானது ஆகும், இந்த ஐகோர்ட்டுக்கு மிகப்பெரிய பாரம்பரியமும், புகழும் உள்ளது. இந்த புகழை நாம் பாதுகாத்து, பராமரிக்க வேண்டும்.

நீதித்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட அரசு துறையுடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டும். இதில் அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

காலாவதியான வழக்குகள்

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் மட்டுமே நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க முடியாது. உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தாலே, தரமான நீதி பரிபாலனத்தை விரைவுபடுத்த முடியும். தற்போது நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 20 சதவீத வழக்குகள் காலாவதியாகி விட்டவை. இதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தாலே, நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெண்கள் அமர்வு

இவரை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி பேசும்போது, "நான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்தபோது, முதல் அமர்வில் நீதிபதி பவானி சுப்பராயனுடன் வழக்கை விசாரித்தேன். ஐகோர்ட்டு வரலாற்றில் முதல் முதலாக, முதல் அமர்வை பெண்கள் அலங்கரித்துள்ளனர். இது பெண்கள் அமர்வு என்று பத்திரிகைகளில் மிகப்பெரிய செய்தியானது. நாடு முழுவதும் 4.7 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நீதித்துறை மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டு வருகிறது. எனவே, நீதி பரிபாலனத்தை நீதிபதிகள் விரைவுபடுத்த வேண்டும். அதற்கு இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகள் சிறந்த பங்களிப்பை ஏற்படுத்தும்" என்றார்.

அமைச்சரிடம் கோரிக்கை

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசியதாவது:-

இந்த ஐகோர்ட்டு 130 ஆண்டுகளுக்கு முன்பு 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும், மிகவும் உறுதியாக உள்ளது. அதுபோல பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களும் மிகவும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஐகோர்ட்டின் சாவியை அப்போதைய கவர்னரிடம் இருந்து தலைமை நீதிபதி பெறும்போது, இந்த ஐகோர்ட்டு சுதந்திரமானது. யாரை பற்றியும் பயப்படாமலும், நீதி பரிபாலனத்தை நீதிபதிகள் செய்யும் வரை இந்த ஐகோர்ட்டு உறுதியாக இருக்கும் என்று 1893-ம் ஆண்டு கூறினார்.

சமூகத்திற்கு நீதியில் நெருக்கடி வராமல் இருக்க வேண்டும் என்றால், நீதிமன்றத்துக்கு நிதியினால் நெருக்கடி வராமல் இருக்க வேண்டும். அந்த நெருக்கடி வராமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை. சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி குறித்த பல நினைவுகள் எனக்குள் உள்ளன. கல்லூரிக்கு தவறாமல் வந்த மாணவர்கள் அனைவரும் சிறந்த வக்கீல்களாக திகழ்கின்றனர். என்னை போன்றவர்கள் நீதிபதிகளாகி விட்டனர். மாணவர்கள் தேர்தலுக்கு மட்டும் கல்லூரிக்கு வந்தவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் மாறி விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

குட்டிக்கதை

இதற்கு பின் பேசிய நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், 'நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிக்காக பல கோடி ரூபாயை ஒதுக்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு பெரிய கட்டிடம் மட்டும் நீதித்துறையின் புகழை தந்து விடாது. இதற்கு ஒரு குட்டிக்கதையை சொல்கிறேன். காட்டில் தலைதெறிக்க ஓடி வந்த பசுவை வழிமறித்த யானை எதற்காக ஓடுகிறாய் என்றது. அதற்கு பசு, 4 கால்கள், ஒரு வால், புல் சாப்பிடுகிற எருமை மாட்டை பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்றது. நீ பசு தானே. எதற்காக ஓடுகிறாய் என்று யானை மீண்டும் கேட்டது. பசுவுக்கும், எருமைக்கும் வித்தியாசம் தெரியாமல் என்னை அதிகாரிகள் பிடித்து விடுவார்கள் என்றது பசு. அப்படியானால், நீ நியாயம் கேட்டு கோர்ட்டுக்கு போ என்றது யானை. அதற்கு பசு, நான் பசு என்று தீர்ப்பு கூறுவதற்கு 20 வருடம் ஆகி விடும் என்றது. இப்போது பசு மட்டுமல்ல யானையும் ஓட தொடங்கியது. இந்த கதையை போல இல்லாமல் நீதிபரிலானத்தை விரைவாக வழங்க வேண்டும். நீதியின் தரம் எப்போதும் தங்க தராசு போல உயர்வாக இருக்க வேண்டும்" என்றார்.

பலரது கனவு

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத், "ஐகோர்ட்டுக்கு 9 அடுக்குகளை கொண்ட இரட்டை கோபுரம் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இங்கு 150 கோர்ட்டுகள் அமையும். இந்த திட்டத்துக்காக ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை நீதித்துறைக்கு அரசு பரிசாக வழங்கியுள்ளது. சென்னை சட்டக்கல்லூரி பல சட்ட நிபுணர்களை உருவாக்கியது. இன்றும் அந்த கல்லூரி கட்டிடம் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது. இந்த கட்டிடத்தை ஐகோர்ட்டாக பயன்படுத்த முடிவு செய்து, சீரமைக்க திட்டமிட்டோம். சுப்ரீம் கோர்ட்டின் கிளை சென்னையில் அமைய வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அந்த கனவு நனவாகும் வகையில், இந்த பாரம்பரியமிக்க சட்டக்கல்லூரி கட்டிடத்தில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதன் மூலம் பலரது கனவு நனவாகும்" என்று பேசினார்.

மேலும் செய்திகள்