< Back
மாநில செய்திகள்
10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சி

தினத்தந்தி
|
16 Nov 2022 7:13 PM GMT

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க 25-ந் தேதி கடைசி நாள் என்று அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் பிச்சை முத்து தெரிவித்துள்ளார்.

அறிவியல் பாட செய்முறை பயிற்சி

2022-2023-ம் கல்வி ஆண்டில் ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012-க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர தங்களது பெயர்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வருகிற 25-ந் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த பின்னர் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுக் கூட அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலும். 10-ம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்கு சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப படிவம்

பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீத வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் அதில் விவரங்களை பூர்த்தி செய்து 2 நகல் எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்