திருநெல்வேலி
அறிவியல் கண்காட்சி
|பாளையங்கோட்டை ஜெயேந்திரா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பாளையங்கோட்டை மகாராஜநகர் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஜெயேந்திரா கல்வி குழுமங்களின் சார்பில், அறிவியல் கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமை தாங்கி, அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார். பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானி சதீஸ்குமார் தொடக்க உரையாற்றினார். மாவட்ட கல்வி அலுவலர் சாந்தா, அரவிந்த் கண் ஆஸ்பத்திரி தலைமை ஆலோசகர் ராமகிருஷ்ணன், மருத்துவ துறை காயத்ரி, அனிதா, பேராசிரியர்கள் கலிஸ்தஸ், முத்துகுமரன், சிவசுப்பிரமணியன், பாலராணி, சுமதி, அப்துல்காதர், லாயிட்ஸ், நிகில் கோயல், மல்லிகா, வைபவ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பல்வேறு அரங்குகளில் மாணவ-மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். அறிவியல் சோதனைகளையும் செய்து காண்பித்தனர். தேசிய நினைவு சின்ன மாதிரிகளையும் பார்வைக்கு வைத்த மாணவர்கள், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும் திரையிட்டனர். வானியல் அரங்கம், ராக்கெட் மாதிரிகள் போன்றவற்றையும் கண்காட்சியில் வைத்திருந்தனர். பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகளும் இதனை பார்வையிட்டு பயனடைந்தனர்.
ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர். தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது.