4 மாவட்டங்களில் வரும் 11ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு
|வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக தூய்மை, மின் இணைப்பு உள்ளிட்ட உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.