அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு
|தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் 1-ந்தேதி (நேற்று) வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.
சென்னை,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு, அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி தொடங்கப்பட்டது. முதலில் 7-ந்தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த கனமழையால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு பின்னர் நடத்தி முடிக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த 18-ந்தேதி தென்மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மட்டும் சில பாடங்களுக்கு தேர்வுகள் நடத்த முடியாமல் போனது. இதற்கிடையில், அரையாண்டு விடுமுறையும் நெருங்கியதால், தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 23-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்களுக்கும் ஜனவரி 1-ந்தேதி(நேற்று) வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. வரலாறு காணாத வெள்ளம் பாதித்த திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வருகிற 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விடுப்பட்ட அரையாண்டு தேர்வுகளை நடத்த அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தயாராக உள்ளது.
இந்த சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியை நேற்று ஆய்வு செய்தார். பள்ளியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.