திருவள்ளூர்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது
|பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
2022-23 கல்வி ஆண்டுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களில் தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதியன்று 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும், மாணவர்களுக்கும், ஜூன் 5-ந் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து. ஆனால் கோடை வெயில் கடுமையாக இருந்த காரணத்தினால் பள்ளி மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கும், நேற்று (திங்கட்கிழமை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வருகின்ற 14-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று காலை திருவள்ளூர் மாவட்டத்தில் 6 முதல் பிளஸ்-2 வரையுள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது மாணவர்கள் உற்சாகமாக பாட புத்தக பைகளை சுமந்து கொண்டு பள்ளிக்குச் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு கல்வி பயில வரும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்கும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளியின் முகப்பு வாயிலின் முன்பு வண்ண வண்ண கோலங்கள் போட்டும், இருபுறங்களிலும் வாழைமரம் மற்றும் வண்ண வண்ண பலூன்களை கட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி கலந்து கொண்டு இந்த கல்வியாண்டில் கல்வி பயில வரும் மாணவ மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ரோஜாப்பூ, சாக்லேட் மற்றும் பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார். இதில், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.