< Back
மாநில செய்திகள்
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட பள்ளி மாணவிகள்
அரியலூர்
மாநில செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட பள்ளி மாணவிகள்

தினத்தந்தி
|
18 Aug 2023 12:33 AM IST

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) தமிழக அரசின் உத்தரவின் பேரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்கனவே தமிழக முதல்-அமைச்சரால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட தொழில் 4.0 திட்டத்தின் கீழ் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட அதி நவீன தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டனர். அப்போது கலெக்டர் பேசுகையில், இந்த அதி நவீன தொழில்நுட்ப மையத்தில் 23 தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்வாறு தரம் உயர்வு செய்யப்பட்ட, மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சிகளையும், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களையும் பள்ளி மாணவிகள் பார்வையிட்டு கற்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் உயர்கல்விக்கு ஏற்ற படிப்பு குறித்து அறிந்துகொள்ளும் வகையிலும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள படிப்புகள் மற்றும் 4.0 திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" நிகழ்ச்சி தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற நவீன தொழிற்பயிற்சிகளை இதன் மூலம் மாணவிகள் உரிய முறையில் கற்று ஈடுபடுத்தி கொள்ள முன்வருவதுடன், இதுபோன்ற நவீன தொழிற்பயிற்சிகள் குறித்து பிற நபர்களுக்கும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். இதில் அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்