< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி பாலிடெக்னிக் மாணவர் பலி

தினத்தந்தி
|
16 July 2023 2:19 AM IST

திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி பாலிடெக்னிக் மாணவர் பலியானார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பள்ளி வேன் மோதி பாலிடெக்னிக் மாணவர் பலியானார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலிடெக்னிக் மாணவர்

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வலச்சேரிக்காடு கால்நடை ஆஸ்பத்திரி அருகில் வசித்து வருபவர் அருணாசலம். இவருடைய மனைவி லதா. இவர்களுடைய மகன் யுவராஜ்(வயது 18). இவர், பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அருணாசலம் கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு சொந்தமான ஒரு குளத்தில் மீன், பாசி குத்தகையை அருணாசலம் ஏலம் எடுத்துள்ளார்.

பள்ளி வேன் மோதிபலி

இந்த குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புக்கரம்பையை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் விற்பதற்காக யுவராஜ் மோட்டார் சைக்கிளில் நேற்று அதிகாலை சென்றார். நடுவிக்குறிச்சி பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பள்ளி வேன், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த யுவராஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யுவராஜ் பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

விபத்தில் உயிரிழந்த யுவராஜ் குடும்பத்திற்கு தனியார் பள்ளி நிர்வாகம் இழப்பீடு வழங்கக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று மாலை திருச்சிற்றம்பலம் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்த தகவல் அறிந்த ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன்(பட்டுக்கோட்டை), காவேரி சங்கர்(பேராவூரணி), திருச்சிற்றம்பலம் சப்-இன்ஸ்பெக்டர் வீரையன், பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த சாலை மறியலால் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் பேராவூரணி ஆகிய வழித்தடங்களில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யுவராஜின் உடல் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சோகம்

குடும்ப வறுமை காரணமாக மீன் விற்க சென்ற பாலிடெக்னிக் மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்