< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பள்ளிக்கூட மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தினத்தந்தி
|
21 Jun 2023 12:15 AM IST

தலையால்நடந்தான்குளம் கிராமத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் இடமாறுதலை ரத்து செய்ய கோரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கயத்தாறு:

தலையால்நடந்தான்குளம் கிராமத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் இடமாறுதலை ரத்து செய்ய கோரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை ஆசிரியர் இடமாற்றம்

கயத்தாறு அருகே தெற்குமயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால்நடந்தான்குளம் கிராமத்தில் நாசரேத் திருமண்டலத்திற்கு பாத்தியப்பட்ட பன்னீர்குளம் சேகரத்தை சேர்ந்த அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 130 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியராக ஆசீர்வாதம் பணியாற்றி வந்தார்.

இவரை திடீரென தெற்கு மயிலோடை பள்ளிக்கு பணி மாறுதல் செய்ததுடன், அவருக்கு பதிலாக புதிதாக அன்பு தலைமை ஆசிரியையாக நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர்.

மாணவ, மாணவியர் போராட்டம்

பள்ளி தலைமை ஆசிரியர் ஆசீர்வாதத்தை திடீரென இடமாற்றம் செய்ததை கண்டித்தும், இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் அவரை இதே பள்ளியில் நியமிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியவாறு மாணவ, மாணவிகள் பள்ளிக்கூட வாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிராம பொதுமக்கள் பள்ளிக்கூடத்துக்கு முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதை தொடர்ந்து கயத்தாறு வட்டார கல்வி அலுவலர் கணேசன், பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீவள்ளி செந்தில், சேகர நிர்வாகிகள், கயத்தாறு போலீசார் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகள், கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது, பள்ளி தலைமை ஆசிரியராக ஆசிர்வாதம் தொடர வேண்டும் என மாணவ, மாணவிகள் தரப்பில் வலியுறுத்தினர். தொடர்ந்து பெற்றோர் தரப்பில் கூறுகையில், இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்து மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்தவர் ஆசீர்வாதம் தான். பள்ளிக்கூட வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்விக்கும் மிகவும் உதவியாக இருந்து வருகிறார். அவரை இடமாற்றம் செய்யக்கூடாது. மேலும், பத்தாம் வகுப்பு வரை புதிதாக அரசு பள்ளிக்கூடம் திறக்க வேண்டும். இதுகுறித்து பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வெளியூர்களுக்கு சென்று படித்து வருகின்றனர். மேலும், பஸ் வசதி இல்லாமல் அவர்கள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பத்தாம் வகுப்பு வரை புதிய அரசு பள்ளியை விரைவில் அமைக்க வேண்டும். கிராமத்துக்கு போதிய பஸ் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.

கல்வி அதிகாரி உறுதி

வட்டார கல்வி அலுவலர் கூறுகையில், தற்போது தலைமை ஆசிரியராக ஆபிரகாம் பணியை தொடருவார் என்றும், தொடர்ந்து அவர் இதே பள்ளிக்கூடத்தில் பணியாற்றுவது குறித்து நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும். புதிதாக அரசு பள்ளிக்கூடம் திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும், என்று உறுதி அளித்தார். இதை தொடர்ந்து மாணவ, மாணவியர் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். கிராம மக்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆசீர்வாதம் மீண்டும் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணியை தொடர்ந்தார். புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியை அன்பு வெளியேறி சென்று விட்டார். இந்த போராட்டத்தால் அந்த கிராமத்தில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்