கள்ளக்குறிச்சி
போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகளை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்
|திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகளை பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் 80 பேர் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் பணிகளை பார்வையிட்டனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள், பெண் குழந்தைகள் பாலியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வது பற்றியும், காவல்துறை சார்ந்த படிப்புகளை படித்து வேலைவாய்ப்புகளை பெறுவது குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும், தவறு செய்வோரை தண்டிக்கவும் போலீஸ் நிலையங்கள் செயல்படுவதாகவும், போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க வயது வரம்பு இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து துப்பாக்கிகள் வைத்திருக்கும் அறை, கம்ப்யூட்டர் அறை, இன்ஸ்பெக்டர் அறை, தகவல் பலகை மற்றும் கோப்புகளை பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர். மேலும் போலீஸ் நிலையத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், அவற்றை பயன்படுத்தும் விதம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 3-ம் வகுப்பு மாணவி சப்-இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் அந்த மாணவியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்தார். பின்னர் தனது தொப்பியை மாணவியின் தலையில் அணிவித்து அவளின் ஆசையை நிறைவேற்றினார். இந்த சம்பவம் அனைவரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியது. இறுதியாக போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ், பள்ளியின் முதல்வர் கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.