< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை விதிகளை கற்றுத்தர வேண்டும்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை விதிகளை கற்றுத்தர வேண்டும்

தினத்தந்தி
|
18 Oct 2022 6:45 PM GMT

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை விதிகளை கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தினார்.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை விதிகளை கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தினார்.

விபத்து காய தினம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக விபத்து காய தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, மாவட்ட வள மைய அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

அக்டோபர் 17-ந் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அன்று முதல் ஒருவாரம் உலக விபத்து காயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முதலுதவி சிகிச்சை

உடற்காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாளவேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு சாலை விதிகளை கற்றுத்தர வேண்டும். ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பாளராகவும், நல்ல ஒழுக்கம், கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கையை கற்றுக்கொடுப்பவராகவும் இருக்க வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களும் முதலுதவி சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

விபத்து பகுதியில் இருந்து உடனடியாக அவசர உதவி எண்ணான 108-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வரும் வரை ரத்தக் கசிவை கட்டுப்படுத்துவது, எலும்பு முறிவு ஏற்பட்ட இடம் நகராமல் இருக்க கட்டு போடுவது உள்ளிட்ட முதல் சிகிச்சைகளை செய்ய வேண்டும். காயங்களை குறைக்கவும், காயத்தால் பாதிக்கப்பட்டவரை பாதுகாக்கவும் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, உடல் காய தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்