கரூர்
பஸ் வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
|கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பஸ்வசதி கேட்டு பள்ளி மாணவர்கள் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 484 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் 54 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்து 760 மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பஸ் நேரத்தை மாற்ற வேண்டும்
கூட்டத்தில், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 525 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 100 மாணவர்கள் ஆத்தூர், ஒரத்தை பகுதிகளில் இருந்து அரசு பஸ் மூலம் தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
காலையில் கரூரிலிருந்து ஆத்தூர், ஒரத்தை வழியாக செல்லும் ஒரேயொரு அரசு பஸ் புகழூர் ஹைஸ்கூல்மேடு பஸ் நிறுத்தத்திற்கு காலை 9.30 மணிக்கு வருகிறது. இதனால் மாணவர்கள் இறைவழிபாட்டு கூட்டத்திற்கு வரமுடியவில்லை. மாலையில் 4.15 மணிக்கே பிறகு இரவு 7.15 மணிக்கு தான் பஸ் வருகிறது. எனவே காலை 9 மணிக்கும், மாலையில் 5.30 மணிக்கும் பஸ் வரும் நேரத்தை மாற்றியமைத்தும், கூடுதலாக மேலும் ஒரு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பஸ் வசதி
குளித்தலை, சின்னயம்பாளையம், காக்காயம்பட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 75 பேர் தினமும் குளித்தலை, கரூர், மணப்பாறை ஆகிய பகுதிகளுக்கு பணி நிமித்தமாக சென்று வருகிறோம். எங்கள் ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் சென்றுதான் பஸ் ஏறி சென்று வருவதால் அவசர காலத்தில் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் ஊருக்கு பஸ்வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தார்சாலை
அச்சமாபுரம் ஞானசேகர் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- நெரூர் தென்பாகம் கிராமத்தில் உள்ள நெரூர் (அக்ரஹாரம் செல்லும் வழியில்) என்ற இடத்தில் மிகவும் புகழ்பெற்ற சற்குரு சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானமும், காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சிமெண்டு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே அதனை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பெற்றோர்களுடன் மனு கொடுக்க சில பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி அந்த மாணவர்களிடம் என்ன பிரச்சினை தொடர்பாக வந்துள்ளீர்கள் என கேட்டறிந்தார்.