தஞ்சாவூர்
பள்ளி மாணவ-மாணவிகள் 6 கி.மீட்டர் நடந்து செல்லும் அவலம்
|பள்ளி மாணவ-மாணவிகள் 6 கி.மீட்டர் நடந்து செல்லும் அவலம்
திருவையாறு:
வைரவன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடப்படுவதால் 6 கி.மீட்டர் பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு டவுன் பஸ்
திருவையாறு அருகே அனைக்குடி, செம்மங்குடி, ஒக்ககுடி, கள்ளக்குடி, 70 பெரம்பூர், மடம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் திருவையாறு வழியாக தஞ்சை செல்ல அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இதில் தினமும் 200-க்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்சில் தஞ்சை, திருவையாறு சென்று படித்து வருகின்றனர். அனைக்குடி கொள்ளிடம் ஆற்றில் இருந்து தஞ்சை ஸ்மார்ட் சிட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லும் சாலை தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. இதில் சாலை சேதமடைந்தது.
6 கி.மீட்டர் நடந்து செல்லும் அவலம்
இதனால் திருவையாறில் இருந்து அனைக்குடிக்கு பஸ் இயக்கப்படாமல் இருந்தது. பின்னர் மீண்டும் பஸ் இயக்கப்பட்டது. ஆனால் வைரவன் கோவி்லில் இருந்து அனைக்குடி வரை சாலை பழுதடைந்து காணப்பட்டதால் அரசு பஸ் இயக்கவில்லை. ஆனால் வைரவன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடுவதால், அங்கிருந்து மாணவ-மாணவிகள் தினமும் 6 கி.மீட்டர் பள்ளிக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வைரவன் கோவிலில் இருந்து அனைக்குடி வரை பழுதடைந்த சாலையை சீரமைத்து பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.