அரியலூர்
கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
|கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவ-மாணவிகளுக்கு...
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் (பி.எம். யசஸ்வி) இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினத்தை சேர்ந்த 9, 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.75 ஆயிரமும், 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2023-24-ம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரத்து 93 மாணவ-மாணவிகளுக்கு மேற்படி திட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பில் படித்துக்கொண்டு இருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு
இதர பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 10-ந்தேதி ஆகும். விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்காக வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 29-ந்தேதி நடைபெறுகிறது. மாணவ-மாணவிகளின் செயல்பாட்டில் இருக்கும் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவு தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் திட்டம் தொடர்பான முழுமையான விவரங்களை https://yet.nta.ac.in, http://socialjustice.gov.in/schemes ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேற்படி திட்டத்தில் தகுதியான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.