திருவள்ளூர்
சோழவரம் அருகே மறுவாழ்வு மையத்தில் பள்ளி மாணவன் சாவு - போலீஸ் விசாரணை
|சோழவரம் அருகே மறுவாழ்வு மையத்தில் பள்ளி மாணவன் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி தாலுகா, மெதிப்பாளையம் கிராமத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் அகிலா (வயது 35). இவரது மகன் மனோஜ்குமார் (14). இவர் அருகே உள்ள தலையாரிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பில் கல்வி பயின்று வருகிறார். மனோஜ்குமார் பள்ளிக்கு சரியாக செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மகனின் நடத்தையை அறிந்து மனோஜ்குமாரை சோழவரம் அருகே உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 21-ந் தேதி அன்று அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவில் பூரி சாப்பிட்டுவிட்டு கழிவறைக்கு சென்ற போது மயக்கம் போட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மனோஜ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரித்தனர்.
இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.