கன்னியாகுமரி
நாகர்கோவிலில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
|நாகர்கோவிலில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி மாணவன்
நாகர்கோவில் மேலராமன்புதூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன், வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் என 2 மகன்கள் உள்ளனர். 13 வயது மகன் பெயர் ஸ்டெபின். இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து எட்டாம் வகுப்பு செல்ல இருந்தான். இந்நிலையில் நேற்று காலையில் பெற்றோர் 2 பேரும் வேலைக்குச் சென்று விட்டனர். மதியம் தாயார் வீட்டுக்கு வந்து மகன்கள் 2 பேருக்கும் சாப்பாடு கொடுத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
மாலையில் ஸ்டெபினின் தம்பி அப்பகுதியில் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடச் சென்றுள்ளான். அப்போது அண்ணனையும் விளையாட வருமாறு அழைத்துள்ளான். ஆனால் ஸ்டெபின் விளையாட வரவில்லை என்றுகூறி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இரவு 8 மணியளவில் ஸ்டீபன் வீட்டிற்கு வரும் போது ஸ்டெபினின் தம்பி அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். வீட்டில் இருந்த ஸ்டெபின் உள்புறமாக பூட்டியிருந்தான். ஆனால் எந்த சத்தமும் வரவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன் கதறிஅழுதார். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த தாயாரும் அங்கு வந்தார். அவரும் அழுது புலம்பினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முரளீதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்டெபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.