திருப்பூர்
மாணவி தற்கொலை செய்ததை போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்த பெற்றோர்
|மடத்துக்குளம் அருகே தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்ததை போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் பெற்றோர் அடக்கம் செய்ததால் மாணவியின் பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மடத்துக்குளம் அருகே தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்ததை போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் பெற்றோர் அடக்கம் செய்ததால் மாணவியின் பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவி தற்கொலை
மடத்துக்குளத்தை அடுத்த கணியூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் முத்துமாரி (வயது 14). அங்குள்ள அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 13 -ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்த கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகம் கணியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பிணத்தை தோண்டி எடுத்து விசாரணை
இதைத்தொடர்ந்து நேற்று மடத்துக்குளம் தாசில்தார் செல்வி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.