< Back
மாநில செய்திகள்
பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் கைது
மாநில செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் கைது

தினத்தந்தி
|
26 Nov 2022 3:32 AM IST

திருநின்றவூரில் பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார். கோவாவில் இருந்து சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் சிக்கினார்.

திருநின்றவூர்,

ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஏஞ்சல் என்ற தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (வயது 34). இவர், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தாளாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வினோத் மீது 4 பிரிவுகளின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

வீடியோ பதிவு

இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட பள்ளி தாளாளர் வினோத் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதில் தான் எந்த தப்பும் செய்யவில்லை என கண்ணீர் மல்க பேசி உள்ளார்.

மேலும் அந்த வீடியோ பதிவில் தன் மீது தவறான குற்றச்சாட்டு வைத்து தன்னை சிதைத்து விட்டதாக கூறி பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறி இருந்தார்.

கைது

பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் சதாசிவம் தலைமையிலான தனிப்படையினர் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு வினோத் கோவாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருவதாக கிடைத்த தகவலின்படி தனிப்படை போலீசார், சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வினோத்தை கைது செய்தனர். பின்னர் அவரை ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஏற்கனவே அவர் மீது போக்சோ உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்ததால் நேற்று காலை வினோத் திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்