< Back
மாநில செய்திகள்
விருத்தாசலம், நெல்லிக்குப்பத்தில்கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு பயிற்சி
கடலூர்
மாநில செய்திகள்

விருத்தாசலம், நெல்லிக்குப்பத்தில்கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு செயல்பாடு பயிற்சி

தினத்தந்தி
|
8 Aug 2023 6:45 PM GMT

விருத்தாசலம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

விருத்தாசலம்,

பயிற்சி முகாம்

விருத்தாசலம் நகராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. முகாமுக்கு நகரமன்ற துணைத் தலைவர் ராணி தண்டபாணி தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார், நகராட்சி துப்புரவு அலுவலர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விருத்தாசலம் நகராட்சி பகுதி நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் சண்முகம், நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் கல்வி துறையில் ஆற்ற வேண்டிய பணிகள், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள சலுகைகள், பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்த்தல், உயர் கல்விக்கான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து இல்லம் தேடி கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பாலமுருகன் கலந்துகொண்டு வார்டில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களை ஊக்கப்படுத்திட வேண்டும் என்றார். முடிவில் நகர்மன்ற உறுப்பினர் பாண்டியன் நன்றி கூறினார்.

நெல்லிக்குப்பம்

இதேபோல், நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மற்றும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. இதற்கு நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினர்.

இதில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வேலுமணி, மாவட்ட திட்ட உதவி அலுவலர் சரவணகுமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மோகன், ஆசிரியர் பயிற்றுநர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார்கள்.

இதில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் கூறுகையில், நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை வசதிகளை கண்காணித்து உரிய முறையில் செயல்படுத்தி கொடுக்க வேண்டும். சேதடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து அதை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தொடா்ந்து, தமிழக அரசு திட்டங்களின் செயல்பாடு மற்றும் மேலாண்மை குழு சார்பாக கல்வி குறித்த அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கவுன்சிலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்சாதிகா மற்றும் நெல்லிக்குப்பம் நகராட்சி, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்