< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - கனிமொழி எம்.பி.
மாநில செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - கனிமொழி எம்.பி.

தினத்தந்தி
|
19 Aug 2024 9:41 PM IST

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பள்ளியில் நடந்த தேசிய மாணவர் படை முகாமிற்கு சென்ற 8-ம் வகுப்பு மாணவி பயிற்சியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக தாளாளர், முதல்வர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து முக்கிய குற்றவாளியான சிவராமனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட துரிஞ்சிப்பட்டி அருகே உள்ள பொன்மலைகுட்டை பகுதியில் சிவராமன் பதுங்கி இருப்பதை கண்டறிந்த போலீசார், அவரை சுற்றி வளைத்தனர்.

அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடியுள்ளார். அப்போது பள்ளத்தில் குதித்ததில் அவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிவராமன் உண்மையான என்.சி.சி பயிற்சியாளர் இல்லையென்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், என்சிசி முகாம் தொடர்பாக பள்ளி முறையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும், எந்தெந்த பள்ளிகளில் போலி என்சிசி முகாம்கள் நடந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக என்சிசி தலைமை அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், என்சிசி முகாம் நடத்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் என்.சி.சி.க்கு எந்த தொடர்பும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி சிவராமன் என்ற ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பள்ளியின் தலைமையாசிரியர் உள்பட 5க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இம்மாதிரியான மனிதத்தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் உறுதியேற்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்