திருவள்ளூர்
திருவாலங்காட்டில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|திருவாலங்காட்டில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பாஞ்சாலை நகரை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 45). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு லதா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகள் பிரியதர்ஷினி (16) திருவாலங்காட்டில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு பிரியதர்ஷினி வந்தபோது பெற்றோர் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியதர்ஷினி இரவு உணவினை அருந்தாமல் படுக்கை அறைக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து வெகு நேரமாக பிரியதர்ஷினி கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரியதர்ஷினி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி பிரியதர்ஷினி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதைபோல் பொன்னேரி அடுத்த கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் நந்தினி (27). இவர் கவரைப்பேட்டை அடுத்த கிளிக்கோடி கிராமத்தில் உள்ள தனியார் செங்கல்சூளை ஒன்றில் கணவர் மாரியுடன் தங்கி வேலை செய்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பச்சண்டை காரணமாக நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்கும் புல்லு மருந்தை (விஷம்) எடுத்து நந்தினி குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நந்தினி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.