< Back
தமிழக செய்திகள்
பள்ளிகளை சேர்ந்த 899 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர்
தமிழக செய்திகள்

பள்ளிகளை சேர்ந்த 899 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
25 Jun 2022 8:23 PM IST

திருப்பூர், அவினாசி, காங்கயம் பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 899 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து 48 வாகனங்களில் குறைபாடுகளை கண்டறிந்தனர்.

திருப்பூர், அவினாசி, காங்கயம் பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 899 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து 48 வாகனங்களில் குறைபாடுகளை கண்டறிந்தனர்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி பஸ்களில் செல்லும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய 4 மாதங்கள் வீதம் ஆண்டுக்கு 3 முறை பள்ளி பஸ்களின் நிலை குறித்து ஆராயப்படுகிறது. திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், அவினாசி, காங்கயம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 209 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் உள்ள வாகனங்களின் ஆய்வு நேற்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மொத்தம் 209 பள்ளிகளை சேர்ந்த 899 வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன. வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய்தேவராஜ், தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேலுமணி, நிர்மலாதேவி, சத்தியமூர்த்தி, சித்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

48 வாகனங்களில் குறைபாடு

பள்ளி வாகனத்தின் படிக்கட்டு, வாகனத்தின் உள்ளே உள்ள நடைப்பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளதா?, வாகனத்தில் பள்ளியின் பெயர், வட்டார போக்குவரத்து அதிகாரி, காவல்துறை அதிகாரி எண் ஆகியவை எழுதப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அதுபோல் வேககட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டது, அவசர வழி ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வை மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி, உதவி கமிஷனர் அனில்குமார் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். 899 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 48 வாகனங்களுக்கு சிறிய குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அவற்றை சரி செய்து ஆய்வுக்கு கொண்டு வர அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். பள்ளி வாகனங்களில் அரசின் விதிமுறைகளை பின்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்