< Back
மாநில செய்திகள்
அரும்பாக்கம் ஊராட்சியில் பஸ்கள் இயக்கப்படாததால் 4 கி.மீ தூரம் நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அரும்பாக்கம் ஊராட்சியில் பஸ்கள் இயக்கப்படாததால் 4 கி.மீ தூரம் நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்

தினத்தந்தி
|
11 Nov 2022 10:13 AM GMT

அரும்பாக்கம் ஊராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள இந்த ஊராட்சி அருகில் அரசு பள்ளிகள் ஏதும் இல்லாததால், பள்ளி மாணவர்கள் மேல்நிலைக் கல்வி கற்பதற்காக 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆற்காடு குப்பம் அரசினர் மேல்நிலை பள்ளிக்கு செல்கின்றனர். இதே போல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் ஆற்காடு குப்பம் வரை நடந்து சென்று, அங்கிருந்து பஸ்சில் திருத்தணியில் உள்ள கல்லூரிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

அரும்பாக்கம் ஊராட்சியில் இருந்து ஆற்காடு குப்பம் வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் கடந்த 15 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாததால், மேற்கண்ட ஊராட்சியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து சென்று படித்து வருகின்றனர்.

இதேபோல் கர்ப்பிணி பெண்கள், மற்றும் முதியவர்கள் அவசர சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே ஆற்காடு குப்பத்திலிருந்து அரும்பாக்கம் ஊராட்சி வரை பள்ளி இயங்கும் காலை மற்றும் மாலை நேரங்களிலாவது அரசு பஸ்களை இயக்க மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்