< Back
மாநில செய்திகள்
நாமக்கல் ஒன்றியத்தில்பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் ஒன்றியத்தில்பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி

தினத்தந்தி
|
11 April 2023 12:30 AM IST

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 முதல் 18 வயது உடைய அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்து பள்ளி கல்வியை முடிக்க செய்ய வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையொட்டி 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற, பள்ளி செல்லா குழந்தைகளை (இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிவதற்கு சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த பணி ஏப்ரல் முதல் 2 வாரங்களிலும், மே இறுதி வாரத்திலும் நடக்கிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

இக்கணக்கெடுப்பு பணியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், கிராமப்புற செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் ஒன்றியத்தில் பள்ளி செல்லா, இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணி, நகராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலனியில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு, குழந்தைகள் பள்ளிக்கு செல்வதன் அவசியம், அரசின் திட்டங்கள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், ஆசிரியர் பயிற்றுனர் கிருஷ்ணலட்சுமி, பெரியப்பட்டி பள்ளி தலைமையாசிரியர் பத்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்