திருப்பூர்
குழந்தைகளின் கல்விக்காக அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் உயில்
|பெற்ற மகன் நினைவாக மற்ற குழந்தைகளின் கல்விக்காக அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் உயில் மூலம் வழங்கிய தாய்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெற்ற மகன் நினைவாக மற்ற குழந்தைகளின் கல்விக்காக அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் உயில் மூலம் வழங்கிய தாய்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அரசு பள்ளி
பிள்ளை பெற்றவர்கள் எல்லோரையும் தாய் என்று சொல்கிறோம். ஆனால் எல்லா பிள்ளைகள் மீதும் அன்பு காட்டத் தெரிந்தவர்கள் தாய்க்கும் தாயாக போற்றப்பட வேண்டியவர்கள். அந்தவகையில் உடுமலையை அடுத்த சின்னவீரன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 558 மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இனி படிக்கப் போகும் பிள்ளைகளுக்கும் தாய் என்று போற்றும் வகையில், விபத்தில் இறந்த தன் மகனுக்காகக் கிடைத்த காப்பீட்டுத்தொகை ரூ.10 லட்சத்தை பள்ளிக்காக உயில் எழுதி வைத்துள்ளார் ஒரு தாய்.
தோளுக்கு மேல் தோழனாய் வளர்ந்து, பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய அன்பு மகன் ஒரு சாலை விபத்தில் மரணத்தை சந்திக்கிறான். ஏற்கனவே உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த கணவர், மகன் மறைந்த சோகத்தில் சில வாரங்களில் உயிரிழக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனிமையில் விடப்பட்ட ஒரு பெண்ணின் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.
ரூ.10 லட்சம் உயில்
ஆனால் அந்த தாய். தன் மகனின் மரணத்தால் தன் கைக்கு கிடைத்த காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சம் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் தனது ஊர் பள்ளிக்குழந்தைகள் கல்விச் செலவுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். அந்த மனசு தாங்க... கடவுள்...என்று அனைவரையும் நெகிழ வைக்கும் அந்த நிகழ்வு திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சின்னவீரன்பட்டி கிராமத்தில் நடந்துள்ளது.
அந்த கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்தவர் மோகன்குமார். விவசாயத்தை தொழிலாகக் கொண்ட இவரது மனைவி நாகரத்தினமும் அதே பள்ளியில் படித்தவர் தான்.உலகத்துக்கே உணவு வழங்கும் விவசாயத்தை தொழிலாகக் கொண்டிருந்தாலும் தான் கல்வி கற்ற பள்ளிக்கு அவ்வப்போது உதவிகளை செய்வது மோகன்குமாரின் வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த தம்பதிகளின் ஒரே மகன் விஷ்ணுபிரசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் இவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது.
இதனால் ஏற்பட்ட சோகத்தில் முடங்கிய மோகன்குமார், வாழ்வின் கடைசி தருணத்தில் பள்ளிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை கருணையுடன் செயல்படுத்தியுள்ளார் நாகரத்தினம். மகனின் காப்பீட்டுத்தொகை ரூ.10 லட்சத்தின் மூலம் கிடைக்கும் வட்டியை ஆண்டுதோறும் மகனின் பிறந்த நாளான ஜூன் 1-ந் தேதி பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உறுதியளித்துள்ளார். அவருக்குப் பிறகு இந்த தொகை முழுமையாக பள்ளியின் புரவலர் நிதியில் சேர்க்கப்படும் என்று உயில் எழுதி வைத்துள்ளார்.
அந்த உயிலை முறையாக பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் இன்பக்கனியிடம் ஒப்படைத்தார். அப்போது அவருடன் முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் சோமசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். நாங்கள் கல்வி கற்ற பள்ளிக்கு உதவுவது என்பது என் கணவர் மற்றும் எனது ஆசையாகும். இதனை வெளிப்படுத்துவதோ, விளம்பரப்படுத்துவதோ அவசியமற்றது என்பதில் நாகரத்தினம் உறுதியாக இருந்துள்ளார். இந்த நிகழ்வு மற்றவர்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற தலைமை ஆசிரியர் இன்பக்கனியின் கோரிக்கையை ஏற்றுள்ளார். நாகரத்தினத்தின் செயலை பலரும் பாராட்டினார்கள்.