திருப்பூர்
உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா
|உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா நேற்று நடந்தது. இதில் 2 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியின் வைர விழா நேற்று நடந்தது. இதில் 2 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
சைனிக் பள்ளி
இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணையை பின்னணியாக கொண்டு உடுமலை அமராவதி நகரில் அமைந்து உள்ளது சைனிக் பள்ளி.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ்-2 வரை ராணுவ சார்புடன் பொது பள்ளிக் கல்வியை ஆங்கில மொழியுடன் கற்பிக்கும் இந்தியாவின் 33-வது பள்ளியாக கடந்த 1962-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு இன்று வரையிலும் சீர்குலையாமல் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.
தேசிய பாதுகாப்பு அகாடமி அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு ஏதுவாக கல்வி, உடல் மற்றும் உளவியல் ரீதியாக மாணவர்களை தயார் செய்வதை நோக்கமாக கொண்டு இப்பள்ளி இயங்கி வருகிறது.
சிறப்புகள்
நுழைவு மற்றும் மருத்துவத் தேர்வு அடிப்படையில் 6-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பில் ஆண்களும், பெண்கள் 6-ம் வகுப்பில் மட்டும் சேர்க்கப்படுகிறார்கள். கடற்படை, ராணுவம், விமானப்படை உள்ளிட்ட முப்படைகளில் நுழைவதற்கு ஒருங்கிணைந்த பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் கூட்டு முயற்சியில் உருவாகி எண்ணற்ற அதிகாரிகளை நாட்டிற்கு உருவாக்கித் தந்து பாதுகாப்புத் துறையில் முக்கிய பங்கு வகித்து வரும் பாரம்பரியம் மிக்க இந்த பள்ளியின் 60-வது ஆண்டு வைர விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதல்-அமைச்சரின் வாழ்த்து மடலை மாணவர்களுக்கு படித்துக் காட்டியதுடன் அதை பள்ளி முதல்வரிடம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
படிப்பில் கவனம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்காக பல நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். தேசத்தை காப்பாற்றும் ஆற்றலை வெளி கொணர்வதற்காக உருவாக்கப்பட்டதே சைனிக் பள்ளி ஆகும். முப்படைகளில் உயரிய பதவிக்கு வருகின்ற ஆசையோடு உள்ளவர்களை மாணவர் பருவத்தில் இருந்து தயார் செய்யும் பணியை இந்த பள்ளி மேற்கொண்டு வருகிறது. இங்கு பயின்றவர்கள் நாட்டை பாதுகாக்கும் உயரிய பொறுப்பில் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
சைனிக்பள்ளி நமது மாநிலத்தில் முதலிடத்திலும், ஒட்டு மொத்தமாக இந்திய அளவில் 20-வது இடத்திலும் உள்ளது. மாணவர்கள் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்தி வெற்றி பெற வேண்டும். கவனச் சிதறல்களுக்கு ஒருபோதும் இடம்கொடுக்க கூடாது. முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெற்று தமிழகத்தில் இன்னொரு சைனிக் பள்ளி தொடங்குவதற்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாணவர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுவதுடன் அனைவரது உள்ளங்களையும் வெல்ல வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
அதைத்தொடர்ந்து அங்கு கட்டப்பட்டுள்ள பணியாளர் குடியிருப்புகளை அமைச்சர்கள் திறந்து வைத்ததுடன் வைர விழா சிறப்பு அஞ்சல் உரையை வெளியிட்டனர்.
பரிசுக்கோப்பை
இதையடுத்து 2021-22ம் ஆண்டிற்கான வாகையர் கோப்பையை பல்லவர் இல்லத்திற்கும், நன்னடத்தை கோப்பையை பாண்டியர் இல்லத்திற்கும் அமைச்சர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல்ரகு, பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், துணை அட்மிரல் அசோக்குமார், லெப்டினன்ட் ஜெனரல் மோகன், மாவட்ட கலெக்டர் வினீத், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், உடுமலை ஒன்றியகுழு தலைவர் மகாலட்சுமி முருகன் உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள், முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.