சிவகங்கை
தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு நாளை குலுக்கல் முறையில் தேர்வு
|ஆர்.டி.இ. சட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர காலியாக உள்ள 1,844 இடங்களில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு நாளை குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
ஆர்.டி.இ. சட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர காலியாக உள்ள 1,844 இடங்களில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு நாளை குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீடு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மை யற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 2022-2023-ம் கல்வியாண்டில் ஆர்.டி.இ. சட்டத்தின்படி, குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், நுழைவுநிலை (எல்.கே.ஜி.) வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்காக மாவட்டத்தில் 150 பள்ளிகளில் காலியாக உள்ள 1,844 இடங்களுக்கு 2,583 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்ய நாளை (திங்கட்கிழமை) அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் நடைபெறுகிறது.
விண்ணப்பம்
எனவே இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பித்து உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்து உள்ள பள்ளிகளில், குலுக்கல் நடைபெறும் நாளான 30.5.2022 அன்று காலையில் தவறாது கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மாணவர், சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள பள்ளி, அரசு பொதுத்தேர்வு மையமாக செயல்பட்டால் தேர்வுகள் முடிந்த பிறகு, 30-ந்தேதி அன்று பிற்பகல் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.