தர்மபுரி
பாலக்கோடு அரசு மகளிர் பள்ளியில்அப்துல்கலாம் சிலை திறப்பு விழாடாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு
|பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவசிலை மற்றும் ராக்கெட் மாதிரி திறப்பு விழா மார்டின் பவுண்டேசன் இயக்குனர் லீமாரோஸ் மார்டின் தலைமையில் நடைபெற்றது. ஸ்பேஷ் ஜோன் இண்டியா நிர்வாக இயக்குனர் ஆனந்த் மேகலிங்கம், டாக்டர் அப்துல்கலாம் பவுண்டேசன் துணை நிறுவனர் ஷேக் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு அப்துல்கலாம் சிலை மற்றும் ராக்கெட் மாதிரியை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அறிவியலில் உலகமே நிலவில் தண்ணீர் இல்லை என தோல்வி அடைந்த போது இந்தியா மட்டும் தான் சந்திராயன் விண்கலம் மூலம் தண்ணீர் உள்ளது என நிரூபித்தது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு விண்வெளி அறிவியலில் இந்தியா முன்னோடியாக இருப்பது உறுதியாகி உள்ளது என்று பேசினார்.
இதில் நீதியல் துறை அலுவலக மேலாளர் சுகுமார், மாவட்ட கல்வி அலுவலர் இளங்கோ, டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.