நாமக்கல்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
|நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
உதவித்தொகை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில், மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் 10 ஆண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
ஆண்டு வருமானம்
இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.4.2023 முதல் 30.6.2023 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்த மட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் செல்ல வேண்டும். மேலும் www.tnvelaivaaippu.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சுயஉறுதிமொழி ஆவணம்
சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் வழங்கப்படும். எனவே இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.