விழுப்புரம்
விழுப்புரத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி; 7-ந் தேதி நடக்கிறது
|விழுப்புரத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 7-ந் தேதி நடக்கிறது.
ஓட்டப்போட்டி
2023-2024-ம் ஆண்டிற்கான விளையாட்டுத்துறை சார்பில் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாசாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆண்டுதொறும் நடத்தப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 7-ந் தேதியன்று மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் 2 பிரிவுகளாக ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. முதல் பிரிவில் 17 வயது முதல் 25 வயது வரை உள்ள (1.1.1998 முதல் 1.1.2007 வரை) பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுப்பிரிவினர்களுக்கும், 25 வயதிற்கு மேல் (31.12.1997 முன்னர்) உள்ள அனைத்து அரசு அலுவலர்கள், பொதுப்பிரிவினர், விளையாட்டு ஆர்வலர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் கலந்துகொள்ளலாம்.
பதிவு மேற்கொள்ள
மேலும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள் தங்களுடைய ஆதார் அட்டை நகலை கட்டாயம் கொண்டு வந்து பதிவு மேற்கொள்ள வேண்டும். இப்போட்டியில் பங்கேற்பவர்கள் தங்கள் பதிவினை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உள்விளையாட்டரங்கத்தில் இன்று (புதன்கிழமை) முதல் நேரடியாக பதிவு மேற்கொண்டு கலந்துகொள்ளலாம். பதிவு மேற்கொள்ள கடைசி தேதி 7-ந் தேதி காலை 6.30 மணியாகும்.
இப்போட்டிகள் காலை 7 மணியளவில் எம்.ஜி.ஆர். உள்விளையாட்டரங்கத்தில் இருந்து தொடங்கப்படும். கலந்துகொள்பவர்கள் 45 நிமிடத்திற்கு முன்னதாக போட்டி நடைபெறும் இடத்தில் தங்களது பதிவை உறுதி செய்ய வேண்டும். போட்டியில் வெற்றிபெறும் முதல் 3 இடங்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே மேற்கண்ட போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் படிக்கும் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுப்பிரிவினர், விளையாட்டு ஆர்வலர்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.