புதுக்கோட்டை
நல்லாட்சி குறியீடுகள் மூலம் மாவட்டங்களை தரவரிசைப்படுத்த திட்டம்
|நல்லாட்சி குறியீடுகள் மூலம் மாவட்டங்களை தரவரிசைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அரசு சிறப்பு செயலர் கூறினார்.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சார்பில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்டங்கள் அளவிலான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு சிறப்பு செயலர் ஹர்.சகாய் மீனா தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா, கூடுதல் கலெக்டர்கள் ஸ்ரீகாந்த், சுகபுத்ரா (தஞ்சாவூர்), தினேஷ்குமார் (திண்டுக்கல்) உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு சிறப்பு செயலர் கூறுகையில், இந்தியாவில் நிதி ஆயோக் வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழுவின் ஆலோசனையின் படியும் பொருளியல் மற்றும் புள்ளியல் துறை அலுவலர்களால் நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகள் 104 மாவட்ட குறியீடுகள் தொடர்பான தரவுகள் 2015 முதல் 21 துறைகளிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இதனை நீடித்த நிலையான வளர்ச்சி குறியீட்டிற்கான இணையதளம் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசு மாவட்டங்களின் வளர்ச்சியினை கண்டறிய 'மாவட்ட நல்லாட்சி குறியீடுகள்' அடிப்படையில் மாவட்டங்களை தரவரிசைப்படுத்த உத்தேசித்துள்ளது. நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, நீடித்த வளர்ச்சி இலக்குகள் ஆலோசகர் சுஜாதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட திட்டமிடும் அலுவலர் (பொறுப்பு) இளங்கோ தாயுமானவன் மற்றும் உயர்நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.