< Back
மாநில செய்திகள்
வனப்பரப்பை அதிகரிக்க இலவசமாக மரக்கன்றுகள் வழங்க திட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வனப்பரப்பை அதிகரிக்க இலவசமாக மரக்கன்றுகள் வழங்க திட்டம்

தினத்தந்தி
|
9 July 2023 12:06 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க இலவசமாக மரக்கன்றுகள் வழங்க வனத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மரக்கன்றுகள்

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வனத்துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, கீரனூர், பொன்னமராவதி, தோப்பு கொல்லை ஆகிய வனத்துறை சரகங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி பணி நடைபெற்று வருகிறது. சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் தயாராகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் வனப்பரப்பை அதிகரிக்க பசுமை தமிழ்நாடு இயக்கம், பல்லுயிர் பரவல், நபார்டு ஆகிய 3 திட்டங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கப்பட உள்ளது. அவர்கள் அந்த மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகள், அரசு நிலங்கள் உள்ளிட்டவற்றில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.

விரைவில் வழங்கப்படுகிறது

தேக்கு, வேங்கை, செம்மரம், பலா மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். பள்ளி, கல்லூரிகள், அரசு நிலங்கள், குளக்கரைகள் உள்ளிட்ட இடங்களில் நாவல், நெல்லி, பாதாம், மகாகனி, வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன. விரைவில் இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இந்த மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதன் மூலம் வனப்பரப்பு அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்