சிறையில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இளைஞர் உயிரிழப்பு: நீதி விசாரணை வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
|பாளையங்கோட்டை சிறையில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
சென்னை,
பாளையங்கோட்டை சிறையில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த தென்காசி இளைஞர் உயிரிழந்த சம்பத்தில் உயர்மட்ட நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் புளியங்குடி வட்டம், நடு கருப்பழகத் தெருவைச் சேர்ந்தவரும், பட்டியலின வகுப்பைச் சார்ந்தருமான மாடசாமி என்பவரின் மகன் தங்கசாமி (வயது 26) கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரை புளியங்குடி காவல்துறையினர் ஜூன் 11ந் தேதியன்று கைது செய்து பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர். அவர் சிறையில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
தங்கசாமி மீது இதற்கு முன்பு எவ்வித வழக்கும் இல்லாத நிலையில் அவரை விசாரணை என்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதும், மேலும் அவரைக் கைது செய்த விவரமோ, சிறையிலடைத்த விவரமோ குடும்பத்தாருக்கு தெரிவிக்காததும், அவர் சிறையில் இறந்து பிறகு தான் அவர் கைது செய்யப்பட்ட விபரமே தங்கசாமியின் அம்மாவிற்கும், தம்பிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
15.06.2023 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறைக்கு வந்து பார்த்தபோது தங்கசாமியின் உடம்பில் காயங்கள் காணப்பட்டுள்ளன. அதை உறவினர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அப்படி வீடியோ எடுத்தவர்களுடைய செல்போனைப் பறித்து, மிரட்டி காவல்துறை உதவி ஆணையர் சதீஸ்குமார் அழித்துள்ளார். இவ்வாறான மரணங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் முந்தைய உத்தரவுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை என தெரிகிறது.
தங்கசாமியின் குடும்பத்தினருக்கு மருத்துவமனையில் உடற்கூராய்வு அறிக்கை மட்டும்தான் 16.06.2023 அன்று தரப்பட்டுள்ளது. வீடியோ பதிவு தரப்படவில்லை. அதை ஏற்கனவே நீதித்துறை நடுவர் எண் 1 சார்பாக போலீசார் வாங்கிச் சென்று விட்டதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கேட்டபோது அங்கு வீடியோ வந்து சேரவில்லை என்கிறார்கள். இதுவும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தங்கசாமியின் இறப்பு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்திட வேண்டுமென வலியுறுத்தி பெற்றோர்களும், உறவினர்களும் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனவே, இந்த மரணம் குறித்து பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், குற்றமிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உயிரிழந்த தங்கசாமியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.