தேனி
சின்னமனூர் அருகே பயங்கரம்: பாலியல் தொல்லை கொடுத்து மாணவியை எரித்து கொல்ல முயற்சி
|சின்னமனூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து எரித்து கொல்ல முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சோ்ந்த 7 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று இந்த சிறுமி, பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு வந்தார். அந்த சிறுமி மட்டும் அங்கு விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 17 வயது சிறுவன், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தான். பின்னர் அங்கு நின்று சுற்றிமுற்றி நோட்டமிட்டான். அருகில் யாரும் இல்லாததால், அந்த சிறுவன் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பயத்தில் அந்த சிறுமி அலறி கூச்சலிட்டார். இதையடுத்து தான் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் சிறுமியை தீ வைத்து கொலை செய்ய முடிவு செய்தான்.
எரித்து கொல்ல முயற்சி
இதையடுத்து அருகில் கிடந்த பேப்பரை எடுத்து தீ வைத்து கொளுத்தி சிறுமியின் மீது போட்டான். இதில் சிறுமி அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
உடல் கருகியதால், வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது-பரபரப்பு
இதற்கிடையே போலீசார் தப்பி ஓடிய சிறுவனை தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடு்த்து எரித்து கொல்ல முயன்றதை சிறுவன் ஒப்புகொண்டான்.
இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.