சென்னை
சிறுதொழில் ஆசைக்காட்டி பெண்களிடம் மோசடி: சென்னையில் கணவன்-மனைவி கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
|சென்னையில் சிறுதொழில் ஆசைகாட்டி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மகாதேவ பிரசாத். இவர் மோகா என்ற பெயரில் மளிகை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் ஒரு முறை ரூ.25 ஆயிரம் முதலீடு செய்தால் மளிகைப்பொருட்கள் வீட்டுக்கு மொத்தமாக அனுப்பி வைக்கப்படும். அதனை எடைக்கு ஏற்ப பிரித்து 'பேக்கிங்' செய்து வழங்கினால் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கமிஷன் தொகை வழங்கப்படும். மேலும் முதலீடு செய்த பணம் ஓராண்டுக்குள் திரும்ப வழங்கப்படும். இந்த சிறுதொழில் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பரவியது. இதையடுத்து அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ.காலனி உள்பட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். அவர்களுக்கு ஒரிரு மாதங்கள் மட்டும் கமிஷன் தொகை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த நிறுவனத்தை மூடிவிட்டு மகா தேவ பிரசாத் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார்.
இந்த நூதன மோசடி வலையில் சிக்கி பணத்தை பறிகொடுத்த பெண்கள் அரும்பாக்கம் அம்பேத்கர் தெருவில் உள்ள மகாதேவ பிரசாத் வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மகாதேவ பிரசாத் ஊழியர்கள் மூலம் தனது வீட்டை கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலி செய்துக் கொண்டிருந்தார். இதையடுத்து பணத்தை இழந்தவர்கள் அந்த ஊழியர்களை பிடித்து அரும்பாக்கம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து மோசடிக்குள்ளான 60-க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த சனிக்கிழமை அன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மோசடியில் ஈடுபட்ட மகாதேவ பிரசாத், அவரது மனைவி ஜெய ஸ்ரீ ஆகிய 2 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். நாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அவர்களிடம், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜான் பிரிட்டோ, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மோசடியில் ஈடுபட்ட தம்பதி விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புகார் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த புகார் மனுக்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தலைமறைவான மோசடி தம்பதியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மகாதேவ பிரசாத், அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகிய 2 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மகாதேவ பிரசாத் தி.மு.க. வட்ட பிரமுகர் என்று கூறப்படுகிறது.