< Back
மாநில செய்திகள்
மகள் திருமணத்துக்காக மண்டபம் முன்பதிவு செய்தவரிடம் நூதன முறையில் மோசடி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மகள் திருமணத்துக்காக மண்டபம் முன்பதிவு செய்தவரிடம் நூதன முறையில் மோசடி

தினத்தந்தி
|
23 Jun 2023 12:51 AM IST

மகள் திருமணத்துக்காக மண்டபம் முன்பதிவு செய்தவரிடம் நூதன முறையில் மோசடி

மகள் திருமணத்துக்காக மண்டபம் முன்பதிவு செய்தவரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகள் திருமணம்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் தனது மகளுக்காக திருமண மண்டபம் முன்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அந்த முதியவரின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் உங்கள் மகள் திருமணத்திற்காக சமையல் காண்ட்ராக்ட்டை சேர்ந்தவர் பேசுகிறேன். எனது பெரியப்பா உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். அவசரமாக பணம் தேவைப்படுகிறது.

ரூ.5 ஆயிரம் அனுப்பி வையுங்கள் என கூறி உள்ளார். இதை நம்பிய அந்த முதியவர் சமையல் பணிக்காக பேசிய தொகையில் பின்னர் குறைத்து கொள்ளலாம் என்று அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் அந்த முதியவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அந்த மர்மநபர் மேலும் ரூ.6 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த தொகையையும் அந்த நபர் கூறிய கணக்கிற்கு முதியவர் அனுப்பி உள்ளார்.

பணம் மோசடி

திருமண நாளின் போதுதான் அந்த முதியவருக்கு தான் புக் செய்த சமையல்காரர் பேசவில்லை, வேறு யாரோ பேசி தன்னை ஏமாற்றி உள்ளனர் என்று தெரிய வந்தது. இது குறித்து அந்த முதியவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சந்தோஷ் குமார், போலீஸ் சூப்பிரண்டு, தேவராணி மற்றும் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் உத்தரவின் பேரில்கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோஸ்லின் அந்தோணியம்மாள், கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அந்த முதியவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கை வைத்து விசாரித்தபோது அது மணத்திடல் பகுதியில் உள்ள ஆன்லைன் சேவை மையம் என்று தெரிய வந்துள்ளது. அங்கு மேற்கொண்ட விசாரணையில் அந்த பணத்தை மணப்புரம் பகுதியில் உள்ள ஒரு ஆன்லைன் சேவை மையத்திற்கு மாற்றி விட்டதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மணப்புரம் ஆன்லைன் சேவை மையத்தில் இருந்து நேரடியாக ஒரு தொகையும் மற்றொரு தொகை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு ஆன்லைன் சேவை மையத்திற்கு மாற்றி அங்கிருந்து பணமாக பெற்றதும் தெரியவந்தது.

ஒருவர் கைது

அங்கு கூறப்பட்ட தகவல்களின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நூதன முறையில் பணம் மோசடி செய்தது தஞ்சை மேல அலங்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களில் இவ்வாறு லட்சக்கணக்கில் நூதன முறையில் செந்தில்குமார் பண மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரியவர்கள் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்