தேனி
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி; 2 பேர் கைது
|மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ேவலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ேவலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உடற்கல்வி ஆசிரியர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 33). இவர், எம்.காம்., பி.எட். படித்துள்ளார். தேனி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்றுவிட்டு பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது எனது குடும்ப நண்பர் ஒருவர், தேனி பொம்மையகவுண்டன்பட்டி பஜார் தெருவை சேர்ந்த பழனியப்பன் (53) என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பழனியப்பன் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், அவர் தனது நண்பர்களான அல்லிநகரம் காந்தி நகரை சேர்ந்த டாஸ்மாக் ஊழியரான தங்கமுத்து (52), கல்வித்துறை ஊழியரான அல்லிநகரத்தை சேர்ந்த சேகர் ஆகியோருடன் சேர்ந்து பலருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாக கூறினார்.
போலியான உத்தரவு
பின்னர் எனக்கும் மதுரையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.12 லட்சம் செலவு ஆகும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறினர். அதை நம்பி அவர்களிடம் 3 தவணையாக மொத்தம் ரூ.11 லட்சத்து 30 ஆயிரத்தை கொடுத்தேன்.
அதற்கு அவர்கள் ஒரு பணி நியமன உத்தரவை கொடுத்தனர். அந்த உத்தரவை பெற்றுக்கொண்டு வந்து உறவினர்களிடம் காண்பித்த போது அது போலியானது என்பது தெரியவந்தது. பின்னர் பணத்தை திருப்பிக் கேட்டபோது ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே அவர்கள் கொடுத்தனர். மீதம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். அவர்கள் குறித்து விசாரித்த போது இதுபோன்று பலரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து இருப்பதாக தெரியவந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
2 பேர் கைது
இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் தங்கமுத்து, பழனியப்பன், சேகர் ஆகிய 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் பழனியப்பன், தங்கமுத்து ஆகிய 2 பேரையும், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள், இதுபோன்று எத்தனை பேரிடம் மோசடி செய்தார்கள்? எவ்வளவு தொகை ஏமாற்றினார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான சேகரை வலைவீசி தேடி வருகின்றனர்.